விடியல்

Sunday, June 04, 2006

10,00,000 - பத்து இலட்சம்

கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணியில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக த.த.ஜ.வினர் கூறிவருகின்றனர். பத்து இல்லை பதினைந்து, பதினெட்டு என்று கூறுவோரும் உண்டு. பத்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டால் வாகன வசதி பின்வருமாறு இருக்க வேண்டும்.

5,000 - ஒப்பந்த ஊர்திகள்

34 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் மிக அதிகபட்சமாக 50 பேர் பயணம் செய்தார்கள் எனக்கொண்டால் 2,50,000 பேர்.

10,000 - வேன்கள்

11பேர் பயணிக்கக்கூடிய வேனில் மிக அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்தனர் எனக் கணக்கிட்டால் 2,00,000 பேர்.

25,000 - பைக்குகள்

2 பேர் பயணம் செய்யக்கூடிய பைக்குகளில் 3 நபர் வீதம் பயணம் செய்தனர் என்று கணக்கிட்டால் 75,000 பேர்.

உள்ளூர் மக்கள்

கும்பகோணத்தின் மொத்த மக்கள் தொகை (இந்துக்கள் உள்பட) சுமார் 1,60,000. இதில் 1,50,000 பேர் கலந்து கொண்டார்கள் எனக் கருதுவோம்.

அக்கம் பக்கத்தினர் - 3,25,000

தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மண்ணார்குடி, சென்னை சாலை என 5 வழித் தொடர்பு உள்ள கும்பகோணத்திற்கு ஒவ்வொரு வழியிலிருந்தும் அரசு பேருந்துகள் மூலமாக சுமார் 1000 பேருந்தில் ஒவ்வொரு பேருந்திலும் குறைந்தது 65 நபர்கள் பயணம் செய்தால் 3,25,000 மக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 வழித்தடங்களிலிருந்தும் காலை 4மணி முதல் மாலை 4 மணிவரை - 12 மணிநேரத்தில் சுமார் 1000 பேருந்துகள் வரவேண்டும். அதாவது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 83 பஸ்கள் - புரியும்படி சொன்னால் இந்த ஐந்து வழிகளில் ஒவ்வொரு வழியிலிருந்தும்
45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வரவேண்டும். இப்படி பேருந்து சேவை உள்ள பகுதி உலகில் எங்குமே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்கு மட்டுமே 45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து. ஒப்பந்த ஊர்திகளில் வருவோரும் இந்த 5 வழிகளில்தான் வரவேண்டும். இதையும் சேர்த்தால் 12 மணி நேரத்தில் சராசரியாக 22.5 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வந்திருக்க வேண்டும். இவை பேருந்துக்கான கணக்கு மட்டுமே. வேன்களின் எண்ணிக்கையும் சேர்த்து நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்.

பேரணி - மாநாடு முடிந்து இந்த வாகனங்களில் வந்தவர்கள் திரும்பி செல்வதாயிருந்தால் மொத்தம் 45,000 வாகனங்கள் ஒவ்வொரு வழியிலும் 9,000 வாகனங்கள் திரும்புவதாகக் கணக்கிடுவோம். 5 விநாடிக்கு ஒரு வாகனம் வீதம் நிமிடத்திற்கு 12 வாகனங்கள். ஒரு மணி நேரத்திற்கு 720 வாகனங்கள். 12.5 மணி நேரத்திற்கு 9000 வாகனங்கள் ஆகியிருக்கும். ஒரு நிமிடத்திற்கு 12 வாகனங்கள் வீதம் சென்றால் எத்துனை அசம்பாவிதங்கள் நடக்கும். எத்துனை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதையெல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது சாத்தியமா? இத்துனை மக்கள் கும்பகோணத்தில் கூட முடியாது என்பதும் கூடினால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதெல்லாம் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா? பின் யாரை ஏமாற்ற 10 இலட்சம்? வெளிநாடுகளில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் நாம் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம்தானே இப்படிச் சொல்ல வைக்கின்றது. அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

குறிப்பு: பேரணி நடந்த மறுநாள் நான் போட்ட கணக்கு இது. பத்து இல்லை. அதில் பாதி கூட கலந்து கொள்ளவில்லை என்பதை தேர்தல் நிரூபித்துவிட்டது. எனினும், த.த.ஜ.வினர் பொய்க் கணக்குகளை, புள்ளி விபர மோசடிகளை இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பக்தர்கள் அறிந்து கொள்வதற்காக இப்போது பதிகிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home