விடியல்

Wednesday, April 12, 2006

அல்லாஹ்வின் கயிறும்; தூக்குக் கயிறும்!

சமநிலைச் சமுதாயம் மாத இதழில் வாசித்த கட்டுரை இது. இதனுடன் முழுமையாக ஒத்துப்போகாவிட்டாலும் சிந்தனையைத் தூண்டும் வரிகளும் இதில் உள்ளன.

அல்லாஹ்வின் கயிறும்; தூக்குக் கயிறும்!

தமிழ்நாட்டில் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டுப் போராட்டம் உச்சநிலையை எட்டியிருக்கிறது. தர்மம் கொடுப்பவனிடம் பாய்ந்து பிடுங்கும் பிச்சைக்காரர்களைப் போலக் கட்சிகள் கூட்டணித் தலைமையிடம் பிடுங்கிக் கொண்டிருக்கின்றன.

கூட்ட நெரிசலில் கொள்கைகள் மிதிபட்டுச் செத்துக் கொண்டிருக்கின்றன. சிலர் கோவணங்களையே கொடிகளாக்கிப் புதுப்புதுக் கட்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். சினிமா மார்க்கெட் இழந்த நடிகர்கள் அரசியலில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள்.

போயஸ் தோட்டத்தில் பணம் காய்ச்சி மரம் இருப்பது எல்லோருக்கும் தெரிகிறது. எனவே, பிச்சைப் பாத்திரம் ஏந்தியபடி பெருங்கூட்டம் அங்கே போய்க் கொண்டிருக்கிறது.

நேற்று முளைத்த ஜாதிக் கட்சிகள்கூட 20 கொடு, 30 கொடு என்று அதட்டிக் கேட்டு வாங்கிக் கொண்டிருக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பயந்து பயந்து ஐந்து தொகுதிகளை கேட்டதாம். 'ஐந்து தொகுதி கொடுத்தால் ஆளையும் அல்லவா நாம் தரவேண்டியிருக்கும்' என்று கூட்டணித் தலைமை கூறியதாகச் சொல்கிறார்கள்.

இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. உண்மை நிலை அதுதான். முஸ்லிம் லீக் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருந்தது. த.மு.மு.க. களத்தில் இறங்கி கலைஞரைச் சந்தித்து 'நாங்கள் முஸ்லிம் லீகை ஆதரிப்போம்' என்று சொன்ன பிறகே லீகுக்கு மூன்று தொகுதி ஒதுக்கப் பட்டதாம்.

தேர்தலிலும் நிக்கமாட்டோம்; வேறு கட்சி முஸ்லிம்களையும் ஆதரிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்த த.மு.மு.க. சமூக நலன் நாடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது பாராட்டத் தக்கது.

அரசியல் என்பது 'எண்ணிக்கைகளின் விளையாட்டு'. அந்த விளையாட்டில் இறங்கிவிட்டால் அதிக எண்ணிக்கையைப் பெற முயல வேண்டும். இல்லையென்றால் அடிபட்டுப் போய்விடுவோம்.

சமுதாயம் விழித்தெழ வேண்டிய சமயம் இது. உடைந்து சிதறிக் கிடக்கும் உதிரி முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைக்க முடியாது. அவர்களுக்கு சமூக நலனைவிடத் தன்னலமே முக்கியம். அவர்களில் சிலர் நோட்டுக் கிடைத்தால் சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். இத்தகையவர்களை சமுதாயம் அடையாளம் கண்டு தூக்கி எறிய வேண்டும்.

இவர்களை விட்டுவிட்டு சமுதாயம் ஒன்றிணைய வேண்டும். சமுதாயத்தை ஒன்றிணைக்கும் பணியில் சமுதாய நலம் நாடும் அறிவாளிகள் ஈடுபட வேண்டும். இதற்காக ஒரு குழு ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இட ஒதுக்கீடு மட்டும் சமுதாய முன்னேற்றத்திற்குப் போதாது. ஒவ்வொரு கட்சியிலும் முஸ்லிம்களுக்குச் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு வேண்டும். ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்தித்து அறிவாளிகள் குழு வற்புறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் குறைந்தது 11 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்கு பலம் முஸ்லிம்களின் கையில் இருக்கிறது. இந்தப் பதினொரு தொகுதிகள் எந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கின்றனவோ அந்தக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இந்தத் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்று அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்தத் தொகுதிகளின் ஜமாஅத்துகளைச் சந்தித்து, நம் சமுதாயம் உரிமகளைப் பெற்று முன்னேற வேண்டுமானால் கட்சி வேறுபாடுகளையும், மற்ற வேறுபாடுகளையும் சமுதாய நலன் கருதி மறந்து, ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டங்களை நாம் முனைந்து செயல்படுத்தினால் கட்சிகளின் வழியாகக் குறைந்தது பத்து சட்டமன்ற உறுப்பினர்களும், தொகுதிகளின் வழியாகப் பதினோரு சட்டமன்ற உறுப்பினர்களும் சமுதாயம் பெற வாய்ப்பு உண்டு. இதனால் எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் நம் குறைகளை எடுத்துச் சொல்ல முடியும். நம் உரிமைப் போராட்டங்களுக்கு அவர்களின் ஆதரவைப் பெற முடியும். சட்டமன்றத்தில் சமுதாயம் தொடர்பான பிரச்சனை விவாதிக்கப்படும்போது பல கட்சிகளிலிருந்து நமக்கு ஆதரவுக் குரல் ஒலிக்கும். இந்த பலத்தால் சமுதாயத்திற்கு எதிரான ஆபத்துகளையும் தடுத்து நிறுத்த முடியும்.

சமுதாய சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

மார்க்கத்தில்தான் உங்களால் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ள முடியாமல் தனித்தனியாகி அறுந்து போகும் நூல்களாகிவிட்டீர்கள். அரசியலிலாவது ஒற்றுமை என்னும் கயிற்றால் ஒன்றிணையுங்கள். இல்லையென்றால் காலம் உங்களுக்கான தூக்குக் கயிற்றைத் தயாரித்துவிடும்.

நன்றி: சமநிலைச் சமுதாயம், ஏப்ரல் 2006

3 Comments:

  • At 1:59 AM, Blogger முகவைத்தமிழன் said…

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    இந்த கட்டுறை ஆக்கபூர்வமாக தோற்றமளித்தாலும் ஒருதலைப்பட்சமாக எழுதபட்டதாக தோன்றுகின்றது. அல்லாஹ்வின் ஒற்றுமை ஒற்றுமைக்கயிற்றைபற்றியும் தூக்கு கயிற்றைபற்றியும் ஆசிரியர் விவரித்துள்ளார். ஆசிரியர் ஒன்றை முக்கியமாக நினைவில் கொள்ள வேன்டும் இன்றுல்ல சமுதாய அமைப்புக்களை வழி நடத்தி செல்லும் தலைமியின் கீழ் இந்த சமுதாய அமைப்பக்கள் தொடர்ந்து செயல்படுமானால் இந்த அமைப்புக்களின் இன்றைய தலைவர்கள் சமுதாயத்தைதான் தூக்கு கயிற்றுக்கு இட்டு சென்று பலியிடுவார்களே தவிர அவர்கள் பலிகடா ஆகமாட்டார்கள்.

    சமுதாயத்தின் இந்த நிலை மாற வேன்டுமானால் இஸ்லாத்தை மறந்து செயல்படும் இந்த சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் தங்களின் பதவிகளை குற்றச்சட்டுக்களுக்கு ஆளாகாத சமுதாய சிந்தனை மிக்க நேர்மையான இளம் தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு அரசியலில் இருந்து முற்றிலும் விலகிவிட வேன்டும். மற்றும் நமது சமுதாய மக்களும் இளரத்தங்களும் செம்மறியாட்டு கூட்டங்கள் போல் தங்கள் தலைமை சொல்வதே வேத வாக்கு என்ற நிலைமையை மாற்றி சிந்தித்து செயல்பட தொடங்கவேன்டும். ஊலல் நிறைந்த தலைவர்களையும் குற்றசாட்டுகளுக்கு ஆளான தலைவர்களையும் புரட்சி செய்து மாற்ற வேன்டும் .

    பல இயக்கங்களின் பிடியிலும் , கீழும் பிறிந்து கிடக்கும் நமது சமுதாய மக்களை ஒன்று படுத்தி ஒரே சமுதாயமாக ஒரே இயக்கத்தின் கீழ் கொன்டு வர வேன்டும் . இதற்கு இயக்கங்களை சமுதாய நலன் கருதி விட்டு கொடுக்க தலைவர்கள் முன்வரவேன்டும். இயக்கத்தினர் ஒருவர் மீது ஒருவர் மட்டமான குற்றசாட்டுக்களை கூறி சமுதாயத்டதின் மீது சேறை வாறி இறைப்பதை நிறுத்த வேன்டும். இவையெல்லாம் நடந்தால் இந்த சமுதாயம் ஒன்று படும்.

    இல்லையென்றால் இந்த மாபெரும் இயக்கங்களையும் தங்கள் மீது ஒருவருக்கொருவர் புழுதியை வாறி இறைத்துகொள்ளும் இந்த தலைவர்களையும் , இயக்கங்களையும் இல்லாமல் செய்வதற்கு ஓரே வழி மற்றும் அந்த பலம் மிக்க ஆயுதம் மத்திய கிழக்காசிய நாடுகளிள் வாழும் நம் சகோதரர்களின் இருக்கின்றது.

    இந்நாடுகளிள் வாழும் நமது தொன்டர்கள் அளிக்கும் நன்கொடைகளை கொன்டே இந்த இயக்கங்கள் சமுதாயத்தை நாசம் செய்து வருகின்றன. இங்கிருந்து இவ்வியக்கங்களுக்கு போகும் பொருளாதாரத்தை எவ்வழியிலேனும் தடுத்து நிறுத்தி இந்த பொருளாதார தடை எனும் இந்த மாபெரும் ஆயுதத்தை நமது சகோதரர்கள் பிரயோகித்தால் இந்த ஆயோக்கிய இயக்கங்கள் சிறிது காலத்திலேயே வந்த சுவடு இல்லாமல் அழிந்துவிடும். நமது சமுதாயமும் காக்கப்படும்.

    இன்சா அல்டலா இது நடக்கும் என்று நம்பி எனது எழுத்தைஇத்துடன் நிருத்துகின்றேன். இன்சா அல்லா மீன்டும் சந்திக்கும் வரை : முகவைத்தமிழன்

     
  • At 6:24 AM, Blogger இப்னு அலிய் said…

    //'ஐந்து தொகுதி கொடுத்தால் ஆளையும் அல்லவா நாம் தரவேண்டியிருக்கும்' என்று கூட்டணித் தலைமை கூறியதாகச் சொல்கிறார்கள்.//

    இ.யூ. முஸ்லிம் லீகின் நிலை இதுதான். தேசிய லீகின் நிலையும் இதுவே. த.மு.மு.க. முஸ்லிம் லீகை ஆதரித்ததால்தான் 3 தொகுதிகள் கொடுக்கபட்டன. (1 தொகுதி பற்றி பின்னர் பார்ப்போமே இன்ஷா அல்லாஹ்) அதுபோலவே தேசிய லீகை த.த.ஜ. ஆதரித்ததால் தான் தேசிய லீகுக்கு 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டன.


    முகவைத்தமிழன், நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் வியப்புக்குரியதாய், நடைமுறைக்கு ஒவ்வாததாய் உள்ளது.

    இப்போதைய தலைவர்கள் எவரும் தானாகவே பதவி விலகி இளையவர்களுக்கு வழிவிட மாட்டார்கள்.

    ஊழல் நடந்தது என்பதை எப்படி நிரூபிப்பது? இதுவரை காதிர் முகைதீன் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிய அளவில் இல்லை. ஆனால் த.மு.மு.க. மற்றும் த.த.ஜ. தலைமை மீது ஊழல் குற்றசாட்டுகள் ஒருவர் மீது மற்றவரால் சுமத்தப்படுகிறது.

    ஒரு சமுதாயமாக, ஒரே இயக்கத்தில் கொண்டு வருவது முடியாத காரியம். ஆனாலும் மிகப் பெரும்பாண்மையான முஸ்லிம்கள் ஆதரிக்கும் இயக்கமாக த.மு.மு.க. உருவாகி இருந்தது. அதிலிருந்து தவ்ஹீது காரணம் கூறி பிரிந்தவர்கள் த.மு.மு.க.வின் நகலைப் போன்றதொரு இயக்கத்தை அதாவது த.த.ஜ.வைத் தோற்றுவித்தது வருந்தத் தக்க நிகழ்வாகும்.

    வளைகுடாவில் வாழும் சகோதரர்கள் தாங்கள் அல்லாஹ்விடம் நன்மையை நாடி அளிக்கும் நன்கொடை மிக முக்கியமான ஒன்று. இதே போன்று முஸ்லிம் லீகுக்கு இவர்கள் கொடுத்தது கிடையாது. ஆனால் முஸ்லிம் லீகை மற்ற முன்னணி இயக்கங்களைவிட குறை சொல்வார்கள். காரணம் வளைகுடாவில் உள்ள மக்களுக்கு செய்திகள் ஒரு தரப்பில் இருந்து மட்டுமே தரப்பட்டு வந்துள்ளது. இப்போது இந்த மாபெரும் பிளவுக்குப் பின் வளைகுடா சகோதரர்கள் ஓரளவு தாயக நிகழ்வுகளை அறிந்து வருகிறார்கள். அவர்கள் இன்னும் கூடுதலாக முயற்சி செய்து தலைவர்களின் யோக்யதனத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் உதவிகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன். முஸ்லிம்கள் நிம்மதியாக தூங்கியதாக சான்றுபகரப்பட்ட இந்த அம்மையாரின் ஆட்சியில் மௌலவி ஹாமித் பக்ரீ அவர்கள் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 100 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த போது, இந்த சமுதயப் பேரியக்கம் அவரை ஜாமீனில் எடுக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அந்த சமயத்தில் த.த.ஜ. உருவாகியிருக்கவில்லை. முதல்வருடன் த.மு.மு.க. நெருக்கமாக இருந்த நேரம் அது.

    'சேராத இடந்தனில் சேர வேண்டாம்' என்று அறிவுரை கூறப்பட்டு, பேராசிரியராக இருப்பதற்கு தகுதியில்லை என்று கூறப்படுகிற காதிர் முகைதீன் அவர்கள்தான் முயற்சி செய்து அவரை வெளியில் எடுத்தார் என்பதை இங்கு அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

     
  • At 2:16 AM, Blogger முகவைத்தமிழன் said…

    கீழ்கன்ட எனது பதிவுக்கு பதிலாக தரப்பட்ட இது இன்றைய சூல்நிலையில் எழுதப்பட்ட கருத்தாழமிக்க ஒரு கட்டு றையாக தோன்றியதால் இதை தனிப்பதிவாக எனது குடிலில் பிரசுரித்துள்ளேன்- முகவைத்தமிழன்
    http://tmpolitics.blogspot.com/

     

Post a Comment

<< Home