விடியல்

Thursday, April 06, 2006

கோவையில் ஒரு கொடுமை!

அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் 1997ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவையில் 19 முஸ்லிம்களை உயிரோடு எரித்தும், கொன்றும் சுட்டெரிக்கும் சுடுகாடாய் ஆக்கினார்கள் வெட்டியான்களாய் மாறிய காவி வெறியர்கள். அதனைத் தொடர்ந்து கோவையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி முஸ்லிம்கள் பலரைக் கைது செய்தது தமிழக காவல்துறை. இன்று 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பிணையில் விட மறுத்து இவ்வழக்கை ஜவ்வு மிட்டாயாய் இழுத்துச் செல்கின்றனர். ஆரம்பத்தில் மெகா சீரியல்களுடன் போட்டியிட்ட இவ்வழக்கு இன்று தினத்தந்தியில் வரும் சிந்துபாத் தொடருடன் போட்டியிடத் துணிந்துள்ளது. 'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது நீதிதேவதை.

கொடுமை என்னவென்றால் இவ்வழக்கில் கைதாகியுள்ள சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் - இவ்விருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை எவ்விடத்திலும் இவர்கள் பெயர் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. இவ்வளவு 'இல்லைகள்' இருந்தும் 8 வருடமாக அநியாயமாக சிறையில் வைத்துள்ளனர். இவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியது மட்டுமல்ல. இவர்கள் உயிருடன் வீட்டிற்குச் செல்வார்களா என்ற பீதி கேள்விக்குறியாய் கண் முன்னே வளைந்து நிற்கிறது.

ஆம்! 08.03.2006 அன்று பத்திரிகையில் 'குண்டுவெடிப்பு கைதிக்கு எய்ட்ஸ்' எனச் செய்தி வந்தது. சிறையில் தன் மகன்களை, கணவன்மார்களை 'நேர்காணல்' காண்பதற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பதறி அடித்து அழுகையுடன் வந்தனர். அன்று நேர்காணல் அறையில் வெறும் அழுகையும் அச்சமும் 'எப்படி?' என்ற கேள்வியும் மட்டுமே ஒலித்தன.

16 வயதினிலே பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்ட அப்பாஸ் என்ற அப்பாவி சிறுவனுக்கு இன்று வயது 24. இச்சிறுவனுக்கு எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் வருவதற்கு சிறையிலோ அல்லது வெளியிலோ செக்ஸ் ரீதியான எந்த முகாந்திரமும் இல்லை.

கோவை அரசு மருத்துவமனையின் மெத்தனப்போக்கால் இக்கொடிய விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பாஸிற்கு இருமுறை கோவை அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. குடல்வால் (Appendix) அறுவை சிகிச்சையும் (அப்பொழுது 2 யூனிட் இரத்தம் ஏற்றப்பட்டது), இரண்டாவதாக கக்கத்தில் கொப்புளம் அகற்றும் சிகிச்சையும் நடந்துள்ளன. விசாரித்ததில் அரசு மருத்துவமனையிலேயே இரத்தம் ஏற்றிய போது வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் STD (Sexual Transmission Desease) பிரிவின் தலைமைப் பேராசிரியர் மகாதேவனை விசாரித்தபோது, 'அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி உள்ளது. இரத்தம் தானமாக பெறும்போது பரிசோதனை செய்துதான் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இரத்தம் கொடுக்கும் நபருக்கு HIV கிருமி இருந்தால் அதன் கிருமிகள் 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகுதான் இரத்தத்தில் HIV கிருமி இருப்பது தெரியவரும். அதற்கு முன் இரத்த தானம் செய்பவர்களின் இரத்தத்தில் இருப்பது தெரியாது. அதனால் இவ்வாறு விபத்து நேருவதுண்டு. எல்லாம் இறைவன் கையில்தான் உள்ளது' என்று கூறினார். 'இதனைத் தவிர்க்க வழியே இல்லையா?' என்று கேட்டபொழுது, 'ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஒழுக்கம் நிறைந்த NSS சிறுவர்கள், இளைஞர்களிடம் இரத்தானம் பெறுவதன் மூலமும் ஏற்கனவே பலமுறை இரத்ததானம் தந்தவர்கள் மூலமும் நாங்கள் தவிர்த்து வருகிறோம்' என்றார்.

இதே அரசு மருத்துவமனையில் ஒரு தம்பதியர் தன் குழந்தைக்கு சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு HIV பாஸிட்டிவ். தாய்க்கும் தந்தைக்கும் HIV கிருமி கிடையாது. வெளி உலகுக்குத் தெரியாமல் இன்னும் இரத்தத்தின் மூலம் எவ்வளவு பேருக்கு HIV தொற்றியுள்ளதோ என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

சரி பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கையை யார் திருப்பித் தருவார்கள்? யார் பொறுப்பு? இன்று சிறையில் இருப்பவர்களின் வீட்டுப் பெண்கள், 8 வருடம் கழித்து வரும் தனது மகன், கணவன் முழுதாய் ஆரோக்கியமாய், உயிருடன் திரும்ப கிடைப்பார்களா என்று எண்ண வேண்டியுள்ளது.

கோவை மத்திய சிறையிலிருந்து அபூஷாய்மா ஃபவ்ஜைனி

நன்றி: விடியல் வெள்ளி, ஏப்ரல் 2006

சுட்டி: தி இந்து

4 Comments:

  • At 12:50 AM, Anonymous Anonymous said…

    Please don't write "Appaavi". You know PJ telling everybody in prison regarding Coimbatore blast are criminal.

     
  • At 2:28 AM, Anonymous Anonymous said…

    DEAR BROTHER ANONY

    //You know PJ telling everybody in prison regarding Coimbatore blast are criminal.//

    CAN U GIVE THE PROOF WHERE N WHEN HE TELLINH LIKE THIS .......

    I AM NOT COME TO SUPPORT P.J

    PAATHIKA PATTA SAHOTHARGAL UYIRGAL MEETHU NEINGAL(TMMK & TNJ)NAADATHIYA AARASIYAL VEELAIYATUGAL POTHUM

    INTHA AARUMAIYANA PAATHIVIN NOOKATHAI THESAI THIRUPATHIR

    Let me complite my comment by giving ur authentic reply

    -kinght

     
  • At 3:57 AM, Blogger முகவைத்தமிழன் said…

    சிறையில் உள்ளவர்களை அப்பாவிகள் அல்லது குற்றவாளிகள் என்று அழைப்பதைவிட அவர்களை குற்றம் சாட்டபட்டவர்கள் என்று அழைப்பதே பொருத்தமானது.

    கோவையில் நடந்த கொடுரங்களை யாராலும் மறக்க இயலாது அதே சமயத்தில் சிறையில் உள்ளவர்களிள் பலரும் அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதையும் மறுக்க இயலாது. அன்று அவர்களின் பார்வையில் அது தற்காப்புக்காகவோ அல்லது பதிலுக்கு நடத்த பட்ட தாக்குதலாக இருந்து அதை இஸ்லாத்தின் அடிப்படையில் நியாயபடுத்த முனையலாம் ஆனால் இந்தி யகுற்றவியல் நடைமுறைசட்டத்தின் பார்வையில் தவறு செய்தவர்கள் அனைவரும் குற்றவாளிகளே.

    இதில் தனிப்பட்ட நபர்களை பற்றி விவாதிக்க வேன்டிய அவசியமில்லை. ஆப்படி விவாதிக்க வேன்டும் என்றால் பலருடைய சுயருபங்களையும் தலைவர்களின் தணிப்பட்ட வாழ்க்கை முறையினையும் விவாதிக்க வேன்டி வரும். இது நம்மீதே நாம் சேறை வாரி இறைத்துகொள்வது போலாகும்.

     
  • At 5:27 AM, Blogger இப்னு அலிய் said…

    MUGAVAITHAMIZHAN said...
    //சிறையில் உள்ளவர்களை அப்பாவிகள் அல்லது குற்றவாளிகள் என்று அழைப்பதைவிட அவர்களை குற்றம் சாட்டபட்டவர்கள் என்று அழைப்பதே பொருத்தமானது.//

    கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகளாகியும் எவ்வித குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல், இந்த வழக்கு குறித்த எந்த ஆவணத்திலும் இவர்களுடைய பெயர் பதிவு செய்யப்படாமலும் இருக்கும்போது இவர்கள் எப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவார்கள். இத்தகையோருக்கு விசாரணைக் கைதிகள் என்று சொல்வர். விசாரணைக் கைதிகளாக 8 ஆண்டுகளாக இருப்பது எந்த விதத்தில் நியாயம் ஐயா? கொஞ்சம் விளக்குங்களேன்.

    அப்போது நடந்த சம்பவங்களில் பலரும் தொடர்புடையவர்கள் என்று தெளிவாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அப்படி தெளிவாகத் தெரிந்தால் அதற்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் இந்திய குற்றவியல் சட்டப்படி தண்டனை கொடுத்துவிட்டு போகட்டுமே. நான் அதனை எதிர்க்கவில்லையே. ஆனால் எவ்வித குற்றமும் சாட்டப்படாமல் விசாரணைக் கைதிகளாகவே பலர் இருக்கிறார்களே? அவர்கள் குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரியவில்லையா? அவர்களில் ஒருவரைக் குறித்துத்தானே இங்கு நான் எழுதியுள்ளேன். 16 வயது சிறுவனாய் உள்ளே சென்றவர் இன்று 24 வயது வாலிபனாய் உள்ளே நிற்கிறார். வெறுமையாக அல்ல, எய்ட்ஸ் என்ற உயிர் கொள்ளி நோயுடன். இதற்கு யார் பொறுப்பு?

    இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட ஜாமீனில் வெளிவரமுடியும். அப்படி இருக்கும்போது விசாரணைக் கைதிகளாகவே உள்ள இவரைப் போன்றவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோருவதும், அதற்காக போரட்ட நடத்ததுவதும் இந்திய அரசியல் சாசணம் நமக்கு வழங்கியுள்ள உரிமை.

     

Post a Comment

<< Home