விடியல்

Wednesday, April 12, 2006

ஜனநாயகத் திருவிழா

சமநிலைச் சமுதாயம் ஏப்ரல் மாத இதழில் 'ஜனநாயகத் திருவிழா' என்னும் தலைப்பில் மவ்லவி அ.அப்துல் அஜீஸ் பாக்கவி அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையிலிருந்து தெரிந்தெடுத்த சில பத்திகள் இவை.

- - - -

ஜனநாயகத் திருவிழா

கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். இந்த நாட்டில் அரைச் சதவீதம், காலே அரைக்கால் சதவீதம் இருக்கும் சமூகங்கள் எல்லாம் அரசியல் களத்தில் மாநில அளவில், தேசிய அளவில் தங்களது சாதிய அமைப்புகளை உருவாக்கி, தங்களது சமுதாயத் தலைவர்களை அடையளப்படுத்தியிருக்கிறார்கள். மிக்பெரிய சிறுபான்மை இனமான முஸ்லிம் சமுதாயம் எத்தனை தலைவர்களை அப்படி உருவாக்கியிருக்கிறது? சதவீத கணக்கில் தொகுதிகள் வேண்டுமென்ற கோரிக்கையைக் கூட இந்த தேர்தலில்தான் சமுதாயம் எழுப்பியிருக்கிறது. அதுவும் மற்றவர்களைப் பார்த்து. நாட்டின் தென்பகுதியிலாவது சொல்லிக் கொள்ளும்படி ஓரிரு தலைவர்கள் இருக்கிறார்கள். வடபகுதியில் எவரும் இல்லை.

முஸ்லிம் லீக் என்ற கட்சியை, விடுதலைப் போராட்ட வரலாற்றை நினைவூட்டும் கட்சியாகவும், தங்களின் சமய, சமுதாயப் பிரச்சனைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லும் ஓர் அமைப்பாகவும் முஸ்லிம்கள் அங்கீகரித்திருந்தார்களே தவிர, அதன் பின்னால் பெரும்பாலும் அவர்கள் அணி திரளவில்லை என்பதை இந்த தேசத்தின் அரசியல் வரலாற்றை வாசிக்கிற எவரும் எளிதில் கணித்துக் கொள்ள முடியும்.

தனி மனித ஒழுக்கத்திலும், சீலத்திலும் மற்ற அரசியல்வாதிகளிலிருந்து அவர்கள் பெருமளவு வேறுபட்டிருக்கிறார்கள். சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்காக பாடுபட்டதைத் தவிர, விழி அசைவிலேனும் விபரீதங்களுக்கு அவர்கள் அடித்தளமிட்டதில்லை. இந்த நல்ல குணங்கள் எல்லாம் அவர்களிடம் இருந்ததனால்தானோ என்னவோ சமுதாயம் அவர்களை அரசியல்வாதிகளாகப் பார்க்கவில்லை.

-----------------------------

ஓட்டுப் போடாமல் தவிர்க்கும் சிந்தனை பொதுவாகி வருகிறது என்பதை வாக்களிப்பின் சதவீதம் நமக்கு உணர்த்துகிறது. 'யார் ஆண்டால் என்ன?' என்று பொதுமக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டதையே காட்டுகிறது.

இஸ்லாமிய பார்வையில் ஓட்டுப்போடுவது என்பது நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதன் அந்தஸ்தை வகிக்கிறது என பிரபல இஸ்லாமிய சட்ட அறிஞர் முஃப்தி முஹம்மது ஷஃபீ அவருடைய திருக்குர்ஆன் விரிவுரையில் குறிப்பிடுகிறார். (மஆரிபுல் குர்ஆன் பாகம்:3. பக்கம்: 71, வசன எண்: 5:8)

'திருக்குர்ஆன் போதிக்கிற ஷஹாதத் (சாட்சியமளித்தல்), ஷபாஅத் (சான்றளித்தல்), வகாலத் (ஒப்புதலளித்தல்) ஆகிய மூன்று தார்மீக கடமைகளின்படியும் ஓட்டளிப்பது முஸ்லிம்களின் கடமை' என அவர் குறிப்பிடுகிறார்.

கத்தர் பல்கலைக் கழகத்தின் ஷரீஆ துறை தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான யூசுப் அல் கர்ளாவியும் (பிறப்பு: 1926) தேர்தல் முறையை ஒருவகை பரிந்துரையே என்றும், அது நீதமன்றத்தின் முன் சாட்சியம் அளிப்பதை ஒத்தது என்றும் கூறுகிறார்.

இஸ்லாமிய பாணி அரசியலுக்காகப் பாடுபடுவோர் எனச் சொல்லிக் கொள்ளும் சிலர், தேர்தல் நடைமுறையை எதிர்ப்பதோடு தேர்தலில் பங்கேற்பதை தவறு என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிய மறுக்கிற முயலுக்கு மூன்றுகால் பிடிவாதமாகும்.

ஆயுதம் ஏந்திய அறப்போராட்டத்தின் தீரமிக்க அடையாளமாகக் கருதப்படுகிற பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறது. ஜனநாயகத்தின் 'காட்பாதர்கள்' என்று சொல்லிக் கொள்ளும் அதிகார வெறிபிடித்த மேற்கத்திய சக்திகளின் அடிவயிற்றில் அது அமிலத்தைக் கொட்டியிருக்கிறது. என்றாலும், இன்றயை சூழலை எதிர்கொள்வதற்கான முதிர்ந்த நடவடிக்கையாக இதை முஸ்லிம் அரசியல் நோக்கர்கள் கருதி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாம் தனக்கென தனியான அரசியல் நடைமுறையைக் கொண்டுள்ளது. அதை மற்றெதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாதுதான். என்றாலும் தற்போதைய தேர்தல் பாணி ஜனநாயகம் இஸ்லாம் வலியுறுத்துகிற மதிப்பீடுகளுக்கு இசைவாக நெருங்கி வருவதாக பிரபல இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல்கர்ளாவி குறிப்பிடுகிறார். (மின் ஃபிக்ஹித் தவ்லா ஃபில் இஸ்லாம்)

தேர்தல் பாணி சுதந்திரமான அரசுமுறை, சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் பேணுவதோடு, மக்கள் தங்கள் தலைவரை சுதந்திரமாகத் தேர்வு செய்யும் அமைப்பும் அதிகார மாற்றத்திற்கான சுமூகமான ஏற்பாட்டையும் வழங்குகிறதென்றால் இந்த முறையை எதிர்க்க முஸ்லிம்களிடம் இஸ்லாமிய அடிப்படையில் எந்த நியாயமும் இல்லை என்று சொல்லுகிற நிலைமைக்கு துனீசிய முஸ்லிம்களின் தலைவர் ரஷீத் கானூஷி ஆளாகியிருக்கிறார் என்றால் சமகாலத்தில் நிலவும் பிரச்சனை எத்தகையது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய கடமை இஸ்லாமிய அறிஞர்களுக்கு இருக்கிறது. சையத் குதுப், ஹஸன் அல்பன்னா ஆகியேர் முன்னிருத்திய கிலாபத்திற்கான தளங்களிலேயே கூட இப்போது தேர்தல் பாணி ஜனநாயகம் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஜனநாயக அமைப்பு முறை இஸ்லாமிய ஜனநாயக அமைப்பு முறைக்கு நெருக்கமானதாக இருப்பதால் இதை இஸ்லாமிய மயமாக்கும் முயற்சியில் இஸ்லாமிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஒரு புறம் முயற்சித்து வருவது கவனிக்கத் தக்கது.

1 Comments:

  • At 1:13 PM, Anonymous Anonymous said…

    இஸ்லாத்தை முன்னிறுத்தி போராடும் இயக்கங்கள் தேர்தலில் போட்டியிடுவதையும்,மற்ற கொள்கையற்ற அரசியல்வாதிகளின் தேர்தலையும் ஒரே அளவுகோல் கொண்டு பார்க்ககூடாது.
    ஏனெனில் எகிப்தில் இஹ்வான்கள் இஸ்லாமிய ஷரீயாவிற்காக ஓட்டு கேட்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கும் ஓட்டு இஸ்லாமிய ஆட்சிக்கான சான்று பகர்தல் ஆகும். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் ஓட்டளித்தால் அநீதிக்கு சாட்சி பகர்வதாகும்

     

Post a Comment

<< Home