விடியல்

Sunday, June 04, 2006

10,00,000 - பத்து இலட்சம்

கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணியில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக த.த.ஜ.வினர் கூறிவருகின்றனர். பத்து இல்லை பதினைந்து, பதினெட்டு என்று கூறுவோரும் உண்டு. பத்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டால் வாகன வசதி பின்வருமாறு இருக்க வேண்டும்.

5,000 - ஒப்பந்த ஊர்திகள்

34 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் மிக அதிகபட்சமாக 50 பேர் பயணம் செய்தார்கள் எனக்கொண்டால் 2,50,000 பேர்.

10,000 - வேன்கள்

11பேர் பயணிக்கக்கூடிய வேனில் மிக அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்தனர் எனக் கணக்கிட்டால் 2,00,000 பேர்.

25,000 - பைக்குகள்

2 பேர் பயணம் செய்யக்கூடிய பைக்குகளில் 3 நபர் வீதம் பயணம் செய்தனர் என்று கணக்கிட்டால் 75,000 பேர்.

உள்ளூர் மக்கள்

கும்பகோணத்தின் மொத்த மக்கள் தொகை (இந்துக்கள் உள்பட) சுமார் 1,60,000. இதில் 1,50,000 பேர் கலந்து கொண்டார்கள் எனக் கருதுவோம்.

அக்கம் பக்கத்தினர் - 3,25,000

தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மண்ணார்குடி, சென்னை சாலை என 5 வழித் தொடர்பு உள்ள கும்பகோணத்திற்கு ஒவ்வொரு வழியிலிருந்தும் அரசு பேருந்துகள் மூலமாக சுமார் 1000 பேருந்தில் ஒவ்வொரு பேருந்திலும் குறைந்தது 65 நபர்கள் பயணம் செய்தால் 3,25,000 மக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 வழித்தடங்களிலிருந்தும் காலை 4மணி முதல் மாலை 4 மணிவரை - 12 மணிநேரத்தில் சுமார் 1000 பேருந்துகள் வரவேண்டும். அதாவது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 83 பஸ்கள் - புரியும்படி சொன்னால் இந்த ஐந்து வழிகளில் ஒவ்வொரு வழியிலிருந்தும்
45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வரவேண்டும். இப்படி பேருந்து சேவை உள்ள பகுதி உலகில் எங்குமே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்கு மட்டுமே 45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து. ஒப்பந்த ஊர்திகளில் வருவோரும் இந்த 5 வழிகளில்தான் வரவேண்டும். இதையும் சேர்த்தால் 12 மணி நேரத்தில் சராசரியாக 22.5 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வந்திருக்க வேண்டும். இவை பேருந்துக்கான கணக்கு மட்டுமே. வேன்களின் எண்ணிக்கையும் சேர்த்து நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்.

பேரணி - மாநாடு முடிந்து இந்த வாகனங்களில் வந்தவர்கள் திரும்பி செல்வதாயிருந்தால் மொத்தம் 45,000 வாகனங்கள் ஒவ்வொரு வழியிலும் 9,000 வாகனங்கள் திரும்புவதாகக் கணக்கிடுவோம். 5 விநாடிக்கு ஒரு வாகனம் வீதம் நிமிடத்திற்கு 12 வாகனங்கள். ஒரு மணி நேரத்திற்கு 720 வாகனங்கள். 12.5 மணி நேரத்திற்கு 9000 வாகனங்கள் ஆகியிருக்கும். ஒரு நிமிடத்திற்கு 12 வாகனங்கள் வீதம் சென்றால் எத்துனை அசம்பாவிதங்கள் நடக்கும். எத்துனை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதையெல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது சாத்தியமா? இத்துனை மக்கள் கும்பகோணத்தில் கூட முடியாது என்பதும் கூடினால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதெல்லாம் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா? பின் யாரை ஏமாற்ற 10 இலட்சம்? வெளிநாடுகளில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் நாம் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம்தானே இப்படிச் சொல்ல வைக்கின்றது. அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

குறிப்பு: பேரணி நடந்த மறுநாள் நான் போட்ட கணக்கு இது. பத்து இல்லை. அதில் பாதி கூட கலந்து கொள்ளவில்லை என்பதை தேர்தல் நிரூபித்துவிட்டது. எனினும், த.த.ஜ.வினர் பொய்க் கணக்குகளை, புள்ளி விபர மோசடிகளை இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பக்தர்கள் அறிந்து கொள்வதற்காக இப்போது பதிகிறேன்.

Thursday, April 13, 2006

கோத்ரா இரயில் எரிப்பு - விளக்கங்கள்

'கோத்ராவில் இரயில் பெட்டியை எரித்தது முஸ்லிம்கள் அல்ல. அது தானாகவே நடந்த விபத்து' என்பதை பானர்ஜி கமிஷன் மட்டும் உண்மைப்படுத்திடவில்லை. மற்றொரு ஆய்வுக்குழுவும் அதனை உண்மைப்படுத்தி இருக்கின்றது.

இந்த அழிவுகளை ஆய்வு செய்யும் குழு யாரையும் சாராதது. இதன் ஆங்கிலப் பெயர் Hazards Centre.

இதில் பல மேதாவிகள் அங்கத்தினராகவும் உதவி செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் இதுபோன்ற விபத்துகள் எங்கே நடந்தாலும், அதன் உண்மைக் காரணங்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கும், அரசுக்கும் சொல்வார்கள்.

இவர்கள், தங்களுடைய ஆய்வை (கோத்ரா இரயில் எரிப்புச் சம்பந்தப்பட்ட ஆய்வை) நடத்திக் கொண்டிருக்கும்போது, இன்னொரு இரயில் பெட்டி எரிந்து போனது (Coach No. 16526 GSCN, Kept at Jagdhir). இந்த இரயில் பெட்டி சபர்மதி எக்ஸ்பிரஸின் எரிந்த S6 பெட்டியைப் போன்றதே. Nov. 21, 2003ல் டெல்லியில் இதனை சுத்தம் செய்து (Maintenance) கொண்டிருக்கும்போது இஃது எரிந்து போனது.

இத்தோடு இந்த அழிவுகளை ஆய்வு செய்யும் மையம் Hazards Centre இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் எரிந்த ஆறு இரயில் பெட்டிகளை ஆய்வு செய்ததது.

டெல்லியில் சுத்தம் செய்யும்போது தீப்பிடித்த இரயில் பெட்டியிலும் தீ ஒரு படுக்கையின் அடியில் கனன்றது. பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்குள் பெட்டி முழுவதும் தீ பிடித்தது. பெட்டி பொசுங்கிப் போய்விட்டது. ஆனால் பெட்டிக்கு வெளியே எந்தச் சேதமுமில்லை, எரியவுமில்லை.

டெல்லியில், எரிந்த பெட்டியிலும் மேற்பகுதி வழியாகத்தான் தீ வேகமாகப் பரவியது.

இந்தக் குழு இன்னொரு உண்மையைக் கண்டெடுத்துச் சொல்லிற்று. அது 'டெல்லியில் எரிந்த பெட்டிக்கும், கோத்ராவில் எரிந்த பெட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவெனில் டெல்லியில் எரிந்த பெட்டியில் அனல் எப்படி கனன்றது என்பது தெரிந்திடவே இல்லை. கோத்ரா பெட்டியில் சிகரெட், பீடி, ஸ்டவ் ஆகிய பொருள்கள் பற்றிய தகவல்கள் உண்டு!'

எனினும் டெல்லி பெட்டியில் தீ பரவிய வேகமும் கோத்ரா பெட்டியில் தீ பரவிய வேகமும் ஒன்று போல்தான் உள்ளது.

யாரும் வெளியே இருந்து எந்தப் பொருளையும், இரண்டு பெட்டிகளிலும் எறியவுமில்லை. நெருப்பிட்டுக் கொளுத்தவுமில்லை.

பானர்ஜி கமிஷன் மட்டுமல்லாமல், இதர நடுவுநிலை ஆய்வுகளும் சொல்லும் சேதி: யாரும் வெளியிலிருந்து பெட்டியினுள் எரிபொருள்களை ஊற்றிடவுமில்லை. நெருப்பைப் பற்ற வைத்திடவுமில்லை.

Based on Hazards Centre Findings, New Delhi.
Frontline, Feb. 11, 2005

இந்த விசாரணை இதர விசாரணைக் கமிஷன்களைப் போல் அல்ல.

காரணம், இதில் பல சிறப்புத் தகுதிகளைக் கொண்ட ஆய்வாளர்கள் இடம்பெற்றார்கள். அவர்கள்,

ஏ.கே. ராய் - இவர் ஓர் இரசாயன என்ஜினியர்தினேஷ் மோகன் - பயோ கெமிக்கல் என்ஜினியர். இவர் இத்துறையில் பேராசிரியராக ஐஐவு யில் பணியாற்றுகிறார். இத்தோடு இவர் காயம்பட்ட மனிதர்கள், அந்தக் காயங்களால் என்னென்ன பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை ஆய்வு செய்வதிலும் வல்லவர்.

சுனில் கேல் - இவர் மெக்கானிக்கல் என்ஜினியர். இவரும் ஐஐவுல் பேராசிரியராக இருந்து வருகிறார். இவர் தெர்மோ டைனமிக்ஸ், திரவங்கள் என்பனவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்.

எஸ்.என். சக்கரவர்த்தி - இவரும் ஒரு மெக்கானிக்கல் என்ஜினியர். இவர் இரயில் பெட்டிகளின் நிலையியல் வல்லுநர். மும்பையில் அலுவலவகம் அமைத்துச் செயல்பட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ரெயில்வேக்கு இரயில் பெட்டிகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

நன்றி: விடியல் வெள்ளி, ஏப்ரல் 2006

Wednesday, April 12, 2006

ஜனநாயகத் திருவிழா

சமநிலைச் சமுதாயம் ஏப்ரல் மாத இதழில் 'ஜனநாயகத் திருவிழா' என்னும் தலைப்பில் மவ்லவி அ.அப்துல் அஜீஸ் பாக்கவி அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையிலிருந்து தெரிந்தெடுத்த சில பத்திகள் இவை.

- - - -

ஜனநாயகத் திருவிழா

கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். இந்த நாட்டில் அரைச் சதவீதம், காலே அரைக்கால் சதவீதம் இருக்கும் சமூகங்கள் எல்லாம் அரசியல் களத்தில் மாநில அளவில், தேசிய அளவில் தங்களது சாதிய அமைப்புகளை உருவாக்கி, தங்களது சமுதாயத் தலைவர்களை அடையளப்படுத்தியிருக்கிறார்கள். மிக்பெரிய சிறுபான்மை இனமான முஸ்லிம் சமுதாயம் எத்தனை தலைவர்களை அப்படி உருவாக்கியிருக்கிறது? சதவீத கணக்கில் தொகுதிகள் வேண்டுமென்ற கோரிக்கையைக் கூட இந்த தேர்தலில்தான் சமுதாயம் எழுப்பியிருக்கிறது. அதுவும் மற்றவர்களைப் பார்த்து. நாட்டின் தென்பகுதியிலாவது சொல்லிக் கொள்ளும்படி ஓரிரு தலைவர்கள் இருக்கிறார்கள். வடபகுதியில் எவரும் இல்லை.

முஸ்லிம் லீக் என்ற கட்சியை, விடுதலைப் போராட்ட வரலாற்றை நினைவூட்டும் கட்சியாகவும், தங்களின் சமய, சமுதாயப் பிரச்சனைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லும் ஓர் அமைப்பாகவும் முஸ்லிம்கள் அங்கீகரித்திருந்தார்களே தவிர, அதன் பின்னால் பெரும்பாலும் அவர்கள் அணி திரளவில்லை என்பதை இந்த தேசத்தின் அரசியல் வரலாற்றை வாசிக்கிற எவரும் எளிதில் கணித்துக் கொள்ள முடியும்.

தனி மனித ஒழுக்கத்திலும், சீலத்திலும் மற்ற அரசியல்வாதிகளிலிருந்து அவர்கள் பெருமளவு வேறுபட்டிருக்கிறார்கள். சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்காக பாடுபட்டதைத் தவிர, விழி அசைவிலேனும் விபரீதங்களுக்கு அவர்கள் அடித்தளமிட்டதில்லை. இந்த நல்ல குணங்கள் எல்லாம் அவர்களிடம் இருந்ததனால்தானோ என்னவோ சமுதாயம் அவர்களை அரசியல்வாதிகளாகப் பார்க்கவில்லை.

-----------------------------

ஓட்டுப் போடாமல் தவிர்க்கும் சிந்தனை பொதுவாகி வருகிறது என்பதை வாக்களிப்பின் சதவீதம் நமக்கு உணர்த்துகிறது. 'யார் ஆண்டால் என்ன?' என்று பொதுமக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டதையே காட்டுகிறது.

இஸ்லாமிய பார்வையில் ஓட்டுப்போடுவது என்பது நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதன் அந்தஸ்தை வகிக்கிறது என பிரபல இஸ்லாமிய சட்ட அறிஞர் முஃப்தி முஹம்மது ஷஃபீ அவருடைய திருக்குர்ஆன் விரிவுரையில் குறிப்பிடுகிறார். (மஆரிபுல் குர்ஆன் பாகம்:3. பக்கம்: 71, வசன எண்: 5:8)

'திருக்குர்ஆன் போதிக்கிற ஷஹாதத் (சாட்சியமளித்தல்), ஷபாஅத் (சான்றளித்தல்), வகாலத் (ஒப்புதலளித்தல்) ஆகிய மூன்று தார்மீக கடமைகளின்படியும் ஓட்டளிப்பது முஸ்லிம்களின் கடமை' என அவர் குறிப்பிடுகிறார்.

கத்தர் பல்கலைக் கழகத்தின் ஷரீஆ துறை தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான யூசுப் அல் கர்ளாவியும் (பிறப்பு: 1926) தேர்தல் முறையை ஒருவகை பரிந்துரையே என்றும், அது நீதமன்றத்தின் முன் சாட்சியம் அளிப்பதை ஒத்தது என்றும் கூறுகிறார்.

இஸ்லாமிய பாணி அரசியலுக்காகப் பாடுபடுவோர் எனச் சொல்லிக் கொள்ளும் சிலர், தேர்தல் நடைமுறையை எதிர்ப்பதோடு தேர்தலில் பங்கேற்பதை தவறு என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிய மறுக்கிற முயலுக்கு மூன்றுகால் பிடிவாதமாகும்.

ஆயுதம் ஏந்திய அறப்போராட்டத்தின் தீரமிக்க அடையாளமாகக் கருதப்படுகிற பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறது. ஜனநாயகத்தின் 'காட்பாதர்கள்' என்று சொல்லிக் கொள்ளும் அதிகார வெறிபிடித்த மேற்கத்திய சக்திகளின் அடிவயிற்றில் அது அமிலத்தைக் கொட்டியிருக்கிறது. என்றாலும், இன்றயை சூழலை எதிர்கொள்வதற்கான முதிர்ந்த நடவடிக்கையாக இதை முஸ்லிம் அரசியல் நோக்கர்கள் கருதி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாம் தனக்கென தனியான அரசியல் நடைமுறையைக் கொண்டுள்ளது. அதை மற்றெதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாதுதான். என்றாலும் தற்போதைய தேர்தல் பாணி ஜனநாயகம் இஸ்லாம் வலியுறுத்துகிற மதிப்பீடுகளுக்கு இசைவாக நெருங்கி வருவதாக பிரபல இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல்கர்ளாவி குறிப்பிடுகிறார். (மின் ஃபிக்ஹித் தவ்லா ஃபில் இஸ்லாம்)

தேர்தல் பாணி சுதந்திரமான அரசுமுறை, சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் பேணுவதோடு, மக்கள் தங்கள் தலைவரை சுதந்திரமாகத் தேர்வு செய்யும் அமைப்பும் அதிகார மாற்றத்திற்கான சுமூகமான ஏற்பாட்டையும் வழங்குகிறதென்றால் இந்த முறையை எதிர்க்க முஸ்லிம்களிடம் இஸ்லாமிய அடிப்படையில் எந்த நியாயமும் இல்லை என்று சொல்லுகிற நிலைமைக்கு துனீசிய முஸ்லிம்களின் தலைவர் ரஷீத் கானூஷி ஆளாகியிருக்கிறார் என்றால் சமகாலத்தில் நிலவும் பிரச்சனை எத்தகையது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய கடமை இஸ்லாமிய அறிஞர்களுக்கு இருக்கிறது. சையத் குதுப், ஹஸன் அல்பன்னா ஆகியேர் முன்னிருத்திய கிலாபத்திற்கான தளங்களிலேயே கூட இப்போது தேர்தல் பாணி ஜனநாயகம் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஜனநாயக அமைப்பு முறை இஸ்லாமிய ஜனநாயக அமைப்பு முறைக்கு நெருக்கமானதாக இருப்பதால் இதை இஸ்லாமிய மயமாக்கும் முயற்சியில் இஸ்லாமிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஒரு புறம் முயற்சித்து வருவது கவனிக்கத் தக்கது.

அல்லாஹ்வின் கயிறும்; தூக்குக் கயிறும்!

சமநிலைச் சமுதாயம் மாத இதழில் வாசித்த கட்டுரை இது. இதனுடன் முழுமையாக ஒத்துப்போகாவிட்டாலும் சிந்தனையைத் தூண்டும் வரிகளும் இதில் உள்ளன.

அல்லாஹ்வின் கயிறும்; தூக்குக் கயிறும்!

தமிழ்நாட்டில் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டுப் போராட்டம் உச்சநிலையை எட்டியிருக்கிறது. தர்மம் கொடுப்பவனிடம் பாய்ந்து பிடுங்கும் பிச்சைக்காரர்களைப் போலக் கட்சிகள் கூட்டணித் தலைமையிடம் பிடுங்கிக் கொண்டிருக்கின்றன.

கூட்ட நெரிசலில் கொள்கைகள் மிதிபட்டுச் செத்துக் கொண்டிருக்கின்றன. சிலர் கோவணங்களையே கொடிகளாக்கிப் புதுப்புதுக் கட்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். சினிமா மார்க்கெட் இழந்த நடிகர்கள் அரசியலில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள்.

போயஸ் தோட்டத்தில் பணம் காய்ச்சி மரம் இருப்பது எல்லோருக்கும் தெரிகிறது. எனவே, பிச்சைப் பாத்திரம் ஏந்தியபடி பெருங்கூட்டம் அங்கே போய்க் கொண்டிருக்கிறது.

நேற்று முளைத்த ஜாதிக் கட்சிகள்கூட 20 கொடு, 30 கொடு என்று அதட்டிக் கேட்டு வாங்கிக் கொண்டிருக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பயந்து பயந்து ஐந்து தொகுதிகளை கேட்டதாம். 'ஐந்து தொகுதி கொடுத்தால் ஆளையும் அல்லவா நாம் தரவேண்டியிருக்கும்' என்று கூட்டணித் தலைமை கூறியதாகச் சொல்கிறார்கள்.

இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. உண்மை நிலை அதுதான். முஸ்லிம் லீக் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருந்தது. த.மு.மு.க. களத்தில் இறங்கி கலைஞரைச் சந்தித்து 'நாங்கள் முஸ்லிம் லீகை ஆதரிப்போம்' என்று சொன்ன பிறகே லீகுக்கு மூன்று தொகுதி ஒதுக்கப் பட்டதாம்.

தேர்தலிலும் நிக்கமாட்டோம்; வேறு கட்சி முஸ்லிம்களையும் ஆதரிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்த த.மு.மு.க. சமூக நலன் நாடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது பாராட்டத் தக்கது.

அரசியல் என்பது 'எண்ணிக்கைகளின் விளையாட்டு'. அந்த விளையாட்டில் இறங்கிவிட்டால் அதிக எண்ணிக்கையைப் பெற முயல வேண்டும். இல்லையென்றால் அடிபட்டுப் போய்விடுவோம்.

சமுதாயம் விழித்தெழ வேண்டிய சமயம் இது. உடைந்து சிதறிக் கிடக்கும் உதிரி முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைக்க முடியாது. அவர்களுக்கு சமூக நலனைவிடத் தன்னலமே முக்கியம். அவர்களில் சிலர் நோட்டுக் கிடைத்தால் சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். இத்தகையவர்களை சமுதாயம் அடையாளம் கண்டு தூக்கி எறிய வேண்டும்.

இவர்களை விட்டுவிட்டு சமுதாயம் ஒன்றிணைய வேண்டும். சமுதாயத்தை ஒன்றிணைக்கும் பணியில் சமுதாய நலம் நாடும் அறிவாளிகள் ஈடுபட வேண்டும். இதற்காக ஒரு குழு ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இட ஒதுக்கீடு மட்டும் சமுதாய முன்னேற்றத்திற்குப் போதாது. ஒவ்வொரு கட்சியிலும் முஸ்லிம்களுக்குச் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு வேண்டும். ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்தித்து அறிவாளிகள் குழு வற்புறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் குறைந்தது 11 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்கு பலம் முஸ்லிம்களின் கையில் இருக்கிறது. இந்தப் பதினொரு தொகுதிகள் எந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கின்றனவோ அந்தக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இந்தத் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்று அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்தத் தொகுதிகளின் ஜமாஅத்துகளைச் சந்தித்து, நம் சமுதாயம் உரிமகளைப் பெற்று முன்னேற வேண்டுமானால் கட்சி வேறுபாடுகளையும், மற்ற வேறுபாடுகளையும் சமுதாய நலன் கருதி மறந்து, ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டங்களை நாம் முனைந்து செயல்படுத்தினால் கட்சிகளின் வழியாகக் குறைந்தது பத்து சட்டமன்ற உறுப்பினர்களும், தொகுதிகளின் வழியாகப் பதினோரு சட்டமன்ற உறுப்பினர்களும் சமுதாயம் பெற வாய்ப்பு உண்டு. இதனால் எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் நம் குறைகளை எடுத்துச் சொல்ல முடியும். நம் உரிமைப் போராட்டங்களுக்கு அவர்களின் ஆதரவைப் பெற முடியும். சட்டமன்றத்தில் சமுதாயம் தொடர்பான பிரச்சனை விவாதிக்கப்படும்போது பல கட்சிகளிலிருந்து நமக்கு ஆதரவுக் குரல் ஒலிக்கும். இந்த பலத்தால் சமுதாயத்திற்கு எதிரான ஆபத்துகளையும் தடுத்து நிறுத்த முடியும்.

சமுதாய சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

மார்க்கத்தில்தான் உங்களால் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ள முடியாமல் தனித்தனியாகி அறுந்து போகும் நூல்களாகிவிட்டீர்கள். அரசியலிலாவது ஒற்றுமை என்னும் கயிற்றால் ஒன்றிணையுங்கள். இல்லையென்றால் காலம் உங்களுக்கான தூக்குக் கயிற்றைத் தயாரித்துவிடும்.

நன்றி: சமநிலைச் சமுதாயம், ஏப்ரல் 2006

Thursday, April 06, 2006

கோவையில் ஒரு கொடுமை!

அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் 1997ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவையில் 19 முஸ்லிம்களை உயிரோடு எரித்தும், கொன்றும் சுட்டெரிக்கும் சுடுகாடாய் ஆக்கினார்கள் வெட்டியான்களாய் மாறிய காவி வெறியர்கள். அதனைத் தொடர்ந்து கோவையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி முஸ்லிம்கள் பலரைக் கைது செய்தது தமிழக காவல்துறை. இன்று 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பிணையில் விட மறுத்து இவ்வழக்கை ஜவ்வு மிட்டாயாய் இழுத்துச் செல்கின்றனர். ஆரம்பத்தில் மெகா சீரியல்களுடன் போட்டியிட்ட இவ்வழக்கு இன்று தினத்தந்தியில் வரும் சிந்துபாத் தொடருடன் போட்டியிடத் துணிந்துள்ளது. 'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது நீதிதேவதை.

கொடுமை என்னவென்றால் இவ்வழக்கில் கைதாகியுள்ள சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் - இவ்விருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை எவ்விடத்திலும் இவர்கள் பெயர் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. இவ்வளவு 'இல்லைகள்' இருந்தும் 8 வருடமாக அநியாயமாக சிறையில் வைத்துள்ளனர். இவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியது மட்டுமல்ல. இவர்கள் உயிருடன் வீட்டிற்குச் செல்வார்களா என்ற பீதி கேள்விக்குறியாய் கண் முன்னே வளைந்து நிற்கிறது.

ஆம்! 08.03.2006 அன்று பத்திரிகையில் 'குண்டுவெடிப்பு கைதிக்கு எய்ட்ஸ்' எனச் செய்தி வந்தது. சிறையில் தன் மகன்களை, கணவன்மார்களை 'நேர்காணல்' காண்பதற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பதறி அடித்து அழுகையுடன் வந்தனர். அன்று நேர்காணல் அறையில் வெறும் அழுகையும் அச்சமும் 'எப்படி?' என்ற கேள்வியும் மட்டுமே ஒலித்தன.

16 வயதினிலே பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்ட அப்பாஸ் என்ற அப்பாவி சிறுவனுக்கு இன்று வயது 24. இச்சிறுவனுக்கு எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் வருவதற்கு சிறையிலோ அல்லது வெளியிலோ செக்ஸ் ரீதியான எந்த முகாந்திரமும் இல்லை.

கோவை அரசு மருத்துவமனையின் மெத்தனப்போக்கால் இக்கொடிய விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பாஸிற்கு இருமுறை கோவை அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. குடல்வால் (Appendix) அறுவை சிகிச்சையும் (அப்பொழுது 2 யூனிட் இரத்தம் ஏற்றப்பட்டது), இரண்டாவதாக கக்கத்தில் கொப்புளம் அகற்றும் சிகிச்சையும் நடந்துள்ளன. விசாரித்ததில் அரசு மருத்துவமனையிலேயே இரத்தம் ஏற்றிய போது வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் STD (Sexual Transmission Desease) பிரிவின் தலைமைப் பேராசிரியர் மகாதேவனை விசாரித்தபோது, 'அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி உள்ளது. இரத்தம் தானமாக பெறும்போது பரிசோதனை செய்துதான் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இரத்தம் கொடுக்கும் நபருக்கு HIV கிருமி இருந்தால் அதன் கிருமிகள் 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகுதான் இரத்தத்தில் HIV கிருமி இருப்பது தெரியவரும். அதற்கு முன் இரத்த தானம் செய்பவர்களின் இரத்தத்தில் இருப்பது தெரியாது. அதனால் இவ்வாறு விபத்து நேருவதுண்டு. எல்லாம் இறைவன் கையில்தான் உள்ளது' என்று கூறினார். 'இதனைத் தவிர்க்க வழியே இல்லையா?' என்று கேட்டபொழுது, 'ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஒழுக்கம் நிறைந்த NSS சிறுவர்கள், இளைஞர்களிடம் இரத்தானம் பெறுவதன் மூலமும் ஏற்கனவே பலமுறை இரத்ததானம் தந்தவர்கள் மூலமும் நாங்கள் தவிர்த்து வருகிறோம்' என்றார்.

இதே அரசு மருத்துவமனையில் ஒரு தம்பதியர் தன் குழந்தைக்கு சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு HIV பாஸிட்டிவ். தாய்க்கும் தந்தைக்கும் HIV கிருமி கிடையாது. வெளி உலகுக்குத் தெரியாமல் இன்னும் இரத்தத்தின் மூலம் எவ்வளவு பேருக்கு HIV தொற்றியுள்ளதோ என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

சரி பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கையை யார் திருப்பித் தருவார்கள்? யார் பொறுப்பு? இன்று சிறையில் இருப்பவர்களின் வீட்டுப் பெண்கள், 8 வருடம் கழித்து வரும் தனது மகன், கணவன் முழுதாய் ஆரோக்கியமாய், உயிருடன் திரும்ப கிடைப்பார்களா என்று எண்ண வேண்டியுள்ளது.

கோவை மத்திய சிறையிலிருந்து அபூஷாய்மா ஃபவ்ஜைனி

நன்றி: விடியல் வெள்ளி, ஏப்ரல் 2006

சுட்டி: தி இந்து

Wednesday, April 05, 2006

நபிவழியின் பரினாம வளர்ச்சி.....?

தமிழக அரசியல் அரங்கில் சூடு தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் எதிர் அணியினரை தாக்கத் தொடங்கிவிட்டனர். கருத்து மோதல்களாக அல்லாமல் தனிநபர் தாக்குதல்களாக இது தொடர்கிறது.

ஒவ்வொரு அணியினரும் தங்கள் தரப்பு வாதத்தை நியாயப்படுத்துவதற்காக எதிர்தரப்பு கட்சிகளின் அநீதத்தை பெரிதுபடுத்தியும், தம்தரப்பு கட்சிகளின் அநீதங்களை மறந்தும் செயல்படுகின்றனர்.

இன்று தமிழ்.நெட் இணைய தளத்தில் உலா வந்தபோது முகவைதமிழன் என்ற த.த.ஜ. தொண்டரின் பக்கத்திற்கான தொடுப்பு கிடைத்து சென்று பார்த்தேன். வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமகம் அளவுக்கு எங்களாலும் பேச - எழுத முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது. அவர் கூறுகிறார்:

ஜெயலலிதாவிடம் உறவு வைப்பதும் என் தாயிடம் உடலுரவு கொள்வதும் ஒன்று என்று கூறி அடுத்த தேர்தலிலேயே கூட்டனி வைத்த ராமதாசின் தாயுடன் உடலுரவு வைத்த ராமதாசின் நடவடிக்கைக்கும் த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாவின் நடவடிக்கைக்கும் ஏதேனும் மாற்றம் உன்டா ???

தாயுடன் உடலுரவு வைத்தது யார் ??? முஸ்லிம் உம்மாவை சுயநலத்திற்காக கருனாநிதியிடம் அடகு வைத்து கூட்டி கொடத்தது யார் ??

தாயுடன் உடலுறவு வைத்தவர் என்று ஜவாஹிருல்லாஹ்வை அவர் குற்றம் சுமத்துகிறார். முஸ்லிம் சமுதாயத்தை கூட்டிக் கொடுத்தவர் என்று குற்றம் சுமத்துகிறார். கூட்டிக்கொடுத்தவர் என்பது விபச்சாரத்திற்கு கூட்டிக்கொடுப்போரையை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

இன்னொமொரு பதிவில்,

இதுக்கு மேலயும் இவுங்க மூஞ்சில செருப்பு, வெலக்கமாற வீசாம இருந்தால் இந்த சமுதாயம் மாதிரி ஒரு இழிச்சாவாயி சமுதாயம் வேற இல்லை.. காலையில ஃபஜ்ர் தொழுதவுடன் நம்ம தவ்ஹீத் ஜமாஅத் தலைவர போயி சந்திப்போம்.. இவங்கனால நாம அவுங்கல ரொம்பத்தான் பகைச்சிக்கிட்டோம்.

மூச்சுக்கு முன்னூறு முறை நபிவழி, நபிவழி என்று கூறினோமே இப்பொழுது எங்கே போய்விட்டது அந்த நபிவழி? கருத்து வேறுபாடு ஏற்பட சாத்தியமுள்ள கடமை அல்லாத உபரி வணக்கங்களில்கூட நபிவழியைத்தான் பின்பற்றுவோம் என்று கூறி தாய் தந்தை மற்றும் உறவினருடன் பகை கொண்டடோம். நபிவழியைப் பின்பற்றவேண்டும் என்பதற்காக போட்டிருந்த தொப்பியை கழற்றி வீசினோமே! அந்த நபிவழி இப்போது எங்கே?

இது நபிவழியின் பரிணாம வளர்ச்சி என்று ததஜவினர் கூறமுற்படுவார்களானால் இத்தகையோர் நபிவழிப்படி நடப்பதாக கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை நாம் உணரவேண்டும்..

அல்லாஹ்வுக்கு பயந்து கொள்வோமாக!

Saturday, April 01, 2006

எங்கள் தொகுதி

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட சென்னை மாகான சட்டசபைக்கு 375 தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அதில் அதிராம்பட்டினம் தொகுதியும் ஒன்று. அதன்பின் நடைபெற்ற தேர்தல் விபரங்கள் வருமாறு:

1952
தேர்தல் நாள் : மார்ச் 27
வெற்றி பெற்றவர் : எஸ. வெங்கடராம ஐயர் (காங்கிரஸ்)
இரண்டாம் நிலை : கே. முத்தையா (கம்யூனிஸ்டு)

வாக்கு விபரம்:
வெங்கடராம ஐயர் - 21461
முத்தையா - 15072

1956ஆம் ஆண்டு இவர் காலமனாததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் வி.வைரவத்தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1957
தேர்தல் நாள் : மார்ச் 1

வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)
இரண்டாம் நிலை : என். சுந்தரேச தேவர் (காங்கிரஸ்)

வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 26785
என். சுந்தரேச தேவர் - 16995

1962
தேர்தல் நாள் : பிப்ரவரி 19

வெற்றி பெற்றவர் : தண்டாயுதபானி பிள்ளை (காங்கிரஸ்)
இரண்டாம் நிலை : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)

வாக்கு விபரம்:
தண்டாயுதபானி பிள்ளை - 31503
ஏ. ஆர். மாரிமுத்து - 26104

-----------------------------------------------------------------------------------------------------
1965 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற 1967 ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை தொகுதியிலேயே அதிராம்பட்டினம் இருந்து வருகிறது. அதன்பின் நடைபெற்ற தேர்தல் விபரங்கள் வருமாறு:
-----------------------------------------------------------------------------------------------------

1967
தேர்தல் நாள் : பிப்ரவரி 21

வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)
இரண்டாம் நிலை : என். ராமசாமி (காங்கிரஸ்)

வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 35198
என். ராமசாமி - 28056

1971
தேர்தல் நாள் : மார்ச் 1

வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)
இரண்டாம் நிலை : என். நாகராஜன் (காங்கிரஸ்)

வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 44565
என். நாகராஜன் - 26229

1977
தேர்தல் நாள் : அக்டோபர் 6

வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (காங்கிரஸ்)
இரண்டாம் நிலை : வி.ஆர்.கே. பழனியப்பன் (அ.தி.மு.க)

வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 25993
என். ராமசாமி - 25082

1980
தேர்தல் நாள் : மே 31

வெற்றி பெற்றவர் : எஸ்.டி. சோமசுந்தரம் (அ.தி.மு.க)
இரண்டாம் நிலை : ஏ.ஆர். மாரிமுத்து (காங்கிரஸ்)

வாக்கு விபரம்:
எஸ்.டி. சோமசுந்தரம் - 52900
ஏ.ஆர். மாரிமுத்து - 42302

1984
தேர்தல் நாள் : டிசம்பர் 24

வெற்றி பெற்றவர் : பி.என். இராமச்சந்திரன் (அ.தி.மு.க)
இரண்டாம் நிலை : ஏ.வி. சுப்பரமணியன் (தி.மு.க.)

வாக்கு விபரம்:
பி.என். இராமச்சந்திரன் - 50493
ஏ.வி. சுப்பரமணியன் - 35376

1989
தேர்தல் நாள் : மே

வெற்றி பெற்றவர் : கா. அண்ணாதுரை (தி.மு.க.)
இரண்டாம் நிலை : ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ்)

வாக்கு விபரம்:
கா. அண்ணாதுரை - 41224
ஏ.ஆர்.மாரிமுத்து - 26543

1991
தேர்தல் நாள் : மே

வெற்றி பெற்றவர் : கே. பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க)
இரண்டாம் நிலை : கா. அண்ணாதுரை (தி.மு.க.)

வாக்கு விபரம்:
கே. பாலசுப்ரமணியம் - 67764
கா. அண்ணாதுரை - 39028

1996
தேர்தல் நாள் : ஏப்ரல் 27

வெற்றி பெற்றவர் : பி. பாலசுப்ரமணியன் (தி.மு.க)
இரண்டாம் நிலை : சீனி பாஸ்கரன் (அ.தி.மு.க.)

வாக்கு விபரம்:
கே. பாலசுப்ரமணியம் - 69880
சீனி பாஸ்கரன் - 36259

2001
தேர்தல் நாள் : மே 10

வெற்றி பெற்றவர் : என். ஆர். ரெங்கராஜன் (த.மா.க)
இரண்டாம் நிலை : பி. பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.)

வாக்கு விபரம்:
என். ஆர். ரெங்கராஜன் - 55474
பி. பாலசுப்ரமணியன் - 48524

Thursday, March 30, 2006

சன் டி.வி.

சன் டி.வி. குறித்து அருளடியான் என்பவர் எழுதிய பதிவிற்கான பின்னூட்டம் இது. அவருடைய பதிவில் பின்னூட்ட வசதி உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளதால் தனிப் பதிவாக இங்கே. (சிவப்பு வண்ணத்தில் உள்ளவை அவரின் குற்றச்சாட்டுகள்)

அவர் என்ன சொல்லவருகிறார் (சன் டி.வி.யைப் புறக்கணிக்க வேண்டும்) என்பது புரிகிறது. ஆனால் அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதன்று.

1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. அயோக்கியத் தனமானது. மோசடித் தனமானது.

சன் டி.வி. ஒரு வணிக நிறுவனம். அந்த நிறுவனம் தன்னுடன் வியாபாரத் தொடர்பு கொள்ளும் மற்றொரு நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது, அது விரும்பியதுபோன்றுதான் செய்து கொள்ளும். அதன் நிபந்தனைகளுக்கு எந்த நிறுவனம் உடன்படுகிறதோ அந்த நிறுவனத்துடன் மட்டும்தான் ஒப்பந்தங்கள் ஏற்படும். இது சாதாரண ஒரு வணிக நடவடிக்கையே. எந்த ஒரு நிறுவனமும் (சன் டி.வி. மற்றும் அதில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் நிறுவனம் உட்பட) நட்டம் அடைவதை விரும்பமாட்டா.

எனவே இந்த குற்றச்சாட்டு, பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றுவிட்ட ஒரு டி.வி.யில் தங்கள் நிகழ்ச்சிகளை காட்ட முடியவில்லையே (பெரும் இலாபம் அடையவில்லையே) என்று ஆதங்கப்படும் மற்றொரு வியாபாரியின் குற்றச்சாட்டே அன்றி - இதனால் பொதுமக்களுக்கு எந்த வித நட்டமும் இல்லை என்பதே எனது கருத்து.

2. சன் டிவி குழுமம் நடத்திய சுமங்கலி கேபிள் நெட்வொர்க் மக்கள் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தது. பிற சேணல்களைப் பார்க்க விடாமல் செய்தது. அதிக கட்டணம் வசூலித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டியது.தாங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செய்ய வேண்டும். பிற யாரும் தலையெடுக்கக் கூடாது என்ற மனப்பாண்மையில் செயல்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸை விட மோசமாக செயல் பட்டார் கலாநிதி மாறன். இதற்கு இவரது தம்பி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தன் துறையைப் பயன்படுத்தி அனைத்து உதவிகளும் செய்தார்.

ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டை அப்படியே கூறியிருக்கிறார்கள். இதுவெல்லாம் வணிக உத்திகளே. சன் குழுமம் சமூகசேவை செய்யவில்லை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

3. செய்திகளில் 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என்ற சொல்லை நீண்ட காலமாகப் பயன்படுத்தினர்.

இந்த விஷயத்தில் எந்த ஒரு ஊடகமும் விதிவிலக்கல்ல. சன் டி.வி.யை மட்டுமே முன்னிறுத்துவது அரசியல் காரணமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

4. தமிழ் நாட்டின் உயிராதாரமான பிரச்சினைகளுக்கு, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதும் கலைஞர், ஜெயலலிதா கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டாம் என கவர்னரிடம் தன் பேரனுடன் சென்று கேட்டார். தயாநிதி மாறனும், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் இது தொடர்பாகப் பேசுகின்றனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு கட்சியா?

இதில் ஓரளவு உண்மை உண்டு என்றாலும் அரசியல் ரீதியிலான முறையிலேயே விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியை விமர்சிக்கிறீர்களா? அல்லது சன் டி.வி.யின் செயலை விமர்சிக்கிறீர்களா? தெளிவுபடுத்தவும்.

5. தினகரனை, சன் டிவி வாங்கியதே ஒரு முறையற்ற வணிக நடவடிக்கை. .....
............அடக்க விலையை விட குறைத்து விற்பது, இலவசப் பொருட்கள் என விற்று பிற நாளிதழ்களை பாதிக்கும் சன் டிவி நிறுவனத்தின் இதழ்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

முறையற்ற வணிக நடவடிக்கை என்றால் என்ன என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அதே போன்று விலையை குறைத்து விற்பனையை அதிகரிப்பது என்பதும் வியாபர உத்திகளில் ஒன்றே. மற்ற இதழ்களின் வியாபாரத்தை பாதிக்கிறது என்பதற்காக அதனை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பது.....??????

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய பொருளாதார ஆசிரியர் குமுதம் குறித்து கூறும்போது (அப்பொழுது அதன் விலை 90 பைசா என்று நினைவு), ஒரு வாரம் குமுதம் அச்சாகும் அத்தனை பிரதிகளையும் விற்பனை செய்யாமல் இருந்தாலும், அதற்கு நட்டம் ஒன்றும் இல்லை. அது விளம்பரம் மூலம் தனது அடக்கவிலையை அடைந்துவிடுகிறது என்று கூறியது என் நினைவுக்கு வருகிறது. (இது இப்போது எந்தளவுக்குப் பொருந்தும் என்பது தெரியாது?)

6. மத்திய அரசின் செய்திகளை வெளியிடும் போது, தயாநிதி மாறனின் செய்திகளை மட்டுமே வெளியிடுவது, பிற அமைச்சர்களின் செய்திகளை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசின் நலத்திட்டங்களை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே வெளியிடுவது, திமுகவிலேயே தயாநிதி மாறன், ஸ்டாலின் ஆகியோரை மட்டுமே காட்டுவது, அன்பழகன், துரைமுகன் - போன்ற தலைவர்களை செய்திகளில் காட்டாமல் இருப்பது, கூட்டணிக் கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிப்பது என பட்டியலிட்டு மாளாது சன் டிவியின் அழிம்புகள்.

6. இதுவும் அனைத்து ஊடகங்களும் செய்யும் தவறே. நமக்குத் தேவையான அல்லது நமக்குப் பிடித்தமானவர்களின் செய்திகளை மட்டும் தருவது. சன் டி.வி.யைவிட ஜெயா டி.வி. இந்த விஷயத்தில் பலநூறு மடங்கு மோசம் என்பதே எனது கருத்து. சன் டி.வி.யை மட்டுமே இது குறித்து விமர்சனம் செய்வது அறிவுடைமை ஆகாது.

இறுதியாக நான் சன் டி.வி. யிலோ அல்லது தி.மு.க.விலோ ஊதியம் பெறவில்லை; அந்த கட்சிகளில் நான் உறுப்பினரும் இல்லை. மற்றும் சமுதாயத்தை முன்னர் குறை கூறப்பட்ட இயக்கங்களைவிட அதிகமாக கூறுபோட்டு சந்தி சிரிக்க வைத்த புண்ணியவான்களான இரு இயக்கங்கள் எதிலும் உறுப்பினர் கிடையாது. எந்த ஒரு நிறுவனமும் ஏகபோக நிறுவனமாக மாறினால் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதிலும் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் சன் குழுமம் குறித்த உங்கள் விமர்சனம் ஒருதலைப்பட்சமானது என்பதை சுட்டிக்காட்டவே இதனை எழுதுகிறேன்.